Aquaculture Success Story
நாற்றங்கால் முறையில் வனாமி இறால் குஞ்சுகள் வளர்ப்பு
அனுபவ பகிர்வு
முன்னோடி இறால் பண்ணையாளர் அனுபவம்

எனது பெயர் R. இரவிக்குமார், நான் கடல்சார் அறிவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஓர் முன்னோடி இறால் பண்ணையாளர். நான் ஆராய்ச்சி துறையில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த அந்த காலக்கட்டத்தில் நண்பர்களுடன் இணைந்து இறால் வளர்ப்பில் ஈடுபட வேண்டும் என்னும் நோக்கில் 1989 முதல் இறால் வளர்ப்பு செய்து வருகிறேன்.
20 வருடங்களுக்கும் மேலாக எனக்கு இத்தொழிலில் மிகுந்த அனுபவம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப கால கட்டத்தில் சரியான தொழில்நுட்பம் இல்லாத காரணத்தினால் இறால்களை சரியான முறையில் வளர்க்க இயலவில்லை. அப்பொழுது மோனோடான் என்னும் வரி இறால்களை வளர்ப்பு செய்து வந்தேன்.
பிறகு வெண்புள்ளி போன்ற காரணத்தினால் வரி இறால்களில் பெரும் இழப்பு ஏற்பட்டு உற்பத்தியில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் 2006 – ம் ஆண்டுகளுக்கு பிறகு ‘வனாமி’ எனும் இறாலை இந்தியாவில் அறிமுகம் படுத்தப்பட்டு CAA உரிமம் பெற்ற பண்ணைகளில் குஞ்சுகள் வழங்கப்பட்டன. இந்த வனாமி இறால்களை பொருத்தவரை உணவு தேவை மிக குறைவாக தேவைப்படுவதால் பண்ணையாளர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் இவ்விறால்கள் பண்ணையாளர்கள் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றது.
தொழில்நுட்பம்
நாற்றாங்கால் தொழில்நுட்பம்
வனாமி இறால்களை பொருத்தவரை ‘ஏர்லி மார்ட்டாலிட்டி சின்ரோம்’ (EMS) எனும் தாக்குதலுக்கு உட்பட்டு பெரிதும் பாதிக்கப்பட்டது. இக்கருத்தை மையமாக கொண்டு நாற்றங்கால் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறையில் PL10 அளவுடைய குஞ்சுகள் நாற்றங்கால் குளத்தில் இருப்பு செய்யப்பட்டு பின்னர் அவை 30 நாள் வயதுடைய இளம் குஞ்சுகள் வரை வளர்க்கப்பட்டு பின்னர் வளர்ப்பு குளங்களுக்கு மாற்றப்படுவதன் மூலம் EMS ன் தாக்குதலில் இருந்து விடுபட்டு மற்றும் குறைந்த நாட்களில் அதிக வளர்ச்சி திறனை அடைவது கண்டறியப்பட்டது.

எனது Reinforced Concrete Tank (Epoxy Coated) பண்ணையில் தொட்டியில் இத்தொழில்நுட்பத்தை செய்து வருகிறேன். இதன் கொள்ளளவு சுமார் 300 டன்கள் லிட்டர் மற்றும் இதன் சுற்றளவு 150 அடி மற்றும் பரப்பளவு 50 ச.மீ. ஆகும். மேலும் நிழல்வலை அமைப்பு கொண்ட வசதி ஏற்ப்படுத்தப்பட்டு அதிக வெப்பத்திலிருந்து பாதுகாத்து வளர்ப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்த நாற்றங்கால் குளங்களுக்கு தேவையான நீர் ஆதாரம் நீர்த்தேக்க குளத்திலிருந்து 30-40 பி.பி.எம். என்ற அளவில் குளோரின் சிகிச்சை அளித்து, நாற்றங்கால் தொட்டிக்கு மாற்றப்படுகிறது.
நீர்த்தேக்க குளத்திலிருந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நீர் 350 ஜி.எஸ்.எம். உடைய Non fabric வடிகட்டி மூலம் வடிகட்டப்பட்டு தொட்டிக்கு மாற்றப்படுகிறது. சரியான தொழில்நுட்பத்துடன் கூடிய இம்மாதிரியான நாற்றாங்கால் தொழில்நுட்பத்தில் நேரடி இருப்பு செய்யாமல் 30 நாட்கள் வரை இம்முறையில் தொடர் காற்று, தீவன மேலாண்மை மற்றும் நீர் மேலாண்மை போன்றவற்றை முறையாக கடைபிடித்து 0.5 - 2 கிராம் வரை இறால்களை வளர்த்து வளர்ப்பு குளங்களுக்கு மாற்றப்படுகிறது. நாற்றங்கால் முறையில் வளர்ப்பு செய்து வளர்ப்பு குளத்திற்கு மாற்றிய இறால்களை 60 நாட்களிலேயே 30 கவுண்ட் வளர்ச்சியில் (தனி இறால் எடை 32 – 35 கிராம்) இறால்களை அறுவடை செய்ய இயலும். மேலும் இம்மாதிரியான Reinforced Concrete Tank (Epoxy Coated) முறையில் வளர்ப்பு மேற்கொள்ளப்படும் போது இறால்களின் தரம் மேம்படுத்தப்படுகிறது. தொடர் இருப்பு முறை செய்வதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகமாக இருக்கிறது.
Reinforced Concrete Tank (Epoxy Coated) முறையில் இறால் குஞ்சுகள் வளர்ப்பு தொழில்நுட்பம் 2016-17 ம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இம்முறையில் தொடர் காற்று, நீர் மேலாண்மை மற்றும் தீவண மேலாண்மை போன்றவைகள் மூலம் இறாலின் வளர்ச்சி வேகப்படுத்தப்படுகிறது. தினசரி நீர் மாற்றம் இம்முறையில் முக்கியமான ஒன்றாகும். Reinforced Concrete Tank (Epoxy Coated) நாற்றங்கால் முறையில் அதிக அடர்த்தியில் இருப்பு செய்து சிறந்த நீர் மேலாண்மை முறையில் வீரியத்தை கூட்டி இறாலின் வளர்ச்சியை பன் மடங்கு அதிகரிக்க முடியும். இருப்படர்த்தியை பொருத்தவரை 300 டன் லிட்டர் கொள்ளளவுள்ள தொட்டியில் சுமார் 10 லட்சம் குஞ்சுகள் வரை விட்டு வளர்க்கப்படுகின்றது. அதாவது லிட்டருக்கு 3-4 எண்ணிக்கை என்ற அளவில் விட்டு வளர்க்கப்படுகிறது. மேலும் PL10 லிருந்து 30 நாட்கள் வரை வளர்க்க ஆகும் செலவும் முற்றிலுமாக குறைக்கப்படுகிறது. இம்முறையில் 5 எக்டர் அளவில் இருப்பு செய்ய கூடிய இறால் குஞ்சுகள் 300 டன்கள் கொள்ளளவுள்ள Reinforced Concrete Tank (Epoxy Coated) தொட்டியில் வீரியத்தை கூட்டி வளர்க்கப்படுகிறது. நேரடி இருப்பு முறையில் 4 கிராம் என்பது 60 நாட்களில் தான் கிடைக்கும். இம்மாதிரியான நாற்றங்கால் தொழில்நுட்ப முறையில் 25 – 30 நாட்களிலே 4 கிராம் வளர்ச்சியை அடைய முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
முக்கிய நன்மைகள்
நாற்றங்கால் தொழில்நுட்பத்தால் ஏற்படும் நன்மைகள்
கட்டுப்பாடான சூழலில் (Under controlled conditions), தொடர் காற்று, தீவன மேலாண்மை மற்றும் வெப்ப கட்டுப்பாடு போன்ற காரணிகளுக்கு உட்பட்டு வளர்க்கும் போது அழுத்தம் இல்லாமல் சுறுசுறுப்பாக வளர்கிறது. மேலும் இவைகளை வளர்ப்பு குளத்திற்கு மாற்றும்பொழுது எவ்வித பாதிப்பும் இல்லாமல் நல்ல முறையில் வளர்ச்சியடைகிறது மேலும் உற்பத்தியில் பெரும் லாபத்தை ஈட்ட முடிகிறது.
இம்முறையில் கழிவுகளை எளிதாக வெளியேற்ற முடியும்.
நாற்றங்கால் முறையில் வளர்க்கும் இறால்கள் தீவனம் அதிகமாக எடுக்கும் இயல்புடையது. ஆகவே வளர்ப்பு குளத்திற்கு மாற்றும்பொழுது வளர்ப்பு குளத்தில் தானியங்கி உணவிடுவான் கருவி (Automatic feeder) பொருத்தப்பட வேண்டும்.
நோய் தொற்று இம்முறையில் முழுவதும் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் தடுக்கப்படுகிறது. குறிப்பாக EMS எனும் நோய் வராமல் தடுக்கப்படுகிறது.
25 நாட்களில் 2-3 கிராம் வரை வளர்ச்சியை காணமுடிகிறது
TNJFU Success Story
